என்னுடைய வழியில் தெளிவாக சென்று கொண்டிருக்கிறேன் - வீடியோ வெளியிட்ட இளையராஜா
35 நாட்களில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்து விட்டதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை,
இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களின் இசை காப்புரிமை தனக்கே சொந்தம் என வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்தின் 'கூலி' பட டைட்டில் டீசரில் தனது பாடல் இசையை அனுமதி வாங்காமல் பயன்படுத்தியதற்காகவும் அவர் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கிடையே, இளையராஜா இசையில் பல பாடல்களை எழுதிய வைரமுத்து, 'பாடல்கள் எழுதிய பாடலாசிரியரும் இப்படி உரிமை கொண்டாடினால் என்னவாகும்?' என கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் திரைத்துறையில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், "எல்லாருக்கும் வணக்கம். நான் தினமும் கேள்விப்படுகிறேன்; என்னை பற்றி ஏதோ ஒரு வகையில் நிறைய வீடியோக்கள் வந்து கொண்டிருக்கின்றன என்று எனக்கு வேண்டியவர்கள் வந்து சொல்வார்கள். நான் இதில் எல்லாம் கவனம் செலுத்துவதில்லை. ஏனென்றால் மற்றவர்களை கவனிப்பது என்னுடைய வேலை அல்ல; என்னுடையதை கவனிப்பது தான் என் வேலை. நான் என் வழியில் ரொம்ப தெளிவாக சென்று கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கிற நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்பொனியை (symphony) எழுதி முடித்து விட்டேன்.
திரைப்பட பாடல்களுக்கு இசையமைத்துவிட்டு, இடையில் சில இடங்களுக்கும், விழாக்களுக்கும் சென்று தலையை காட்டி விட்டு, கடந்த 35 நாட்களில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்து விட்டேன் என்ற சந்தோஷமான செய்தியை நான் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். ஏனென்றால் திரை இசை என்பது வேறு; பின்னணி இசை என்பது வேறு; இவை எல்லாம் எதிரொலித்தால் அது சிம்பொனி கிடையாது. அதனால் இதை ஒரு சுத்தமான சிம்பொனியாக எழுதி முடித்திருக்கிறேன் என்ற சந்தோஷமான இந்த செய்தியை உங்களுக்கு, என்னுடைய ரசிகர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.