'ஆகஸ்ட் 16, 1947' படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கினார் கவுதம் கார்த்திக்..!
நடிகர் கவுதம் கார்த்திக் 'ஆகஸ்ட் 16, 1947' படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளார்.
சென்னை,
இயக்குனர் பொன்குமார் இயக்கத்தில், நடிகர் கவுதம் கார்த்திக் நடித்துள்ள திரைப்படம் 'ஆகஸ்ட் 16, 1947'. இந்த படத்தில் புதுமுகம் ரேவதி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட், நர்சிராம் சவுத்ரி ஆகியவர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ஒரு கிராமத்து இளைஞரை பற்றிய கதையாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பு குறிப்பிடுவது போல, இந்தியா சுதந்திரம் அடைந்த ஒரு நாளுக்குப் பிறகு படத்தின் நிகழ்வுகள் நடக்கின்றன. தமிழ்நாட்டின் எழில் மிகுந்த இடங்களில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற்றது.
இந்த படத்துக்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். சுதர்சன் படத்தொகுப்பு செய்கிறார். தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் 'ஆகஸ்ட் 16, 1947' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நடிகர் கவுதம் கார்த்திக் 'ஆகஸ்ட் 16, 1947' படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், இது என்னுடைய இதயத்திற்கு நெருக்கமானது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.