தேசிய விருது வென்ற பிரபல நடிகை வாகனம் மோதியதில் காயம்

தேசிய விருது வென்ற பிரபல நடிகை பல்லவி ஜோஷி படப்பிடிப்பு தளத்தில் வாகனம் மோதியதில் காயம் அடைந்து உள்ளார்.

Update: 2023-01-17 07:41 GMT



ஐதராபாத்,


ஜம்மு மற்றும் காஷ்மீரில் 1980-ம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து ஏற்பட்ட காஷ்மீர் கிளர்ச்சியின்போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறினர். இதனை மையப்படுத்தி தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் உருவானது.

இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது.

இதனை தொடர்ந்து, விவேக் அக்னிஹோத்ரி மற்றும் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் இணைந்து தி வேசின் வார் என்ற பெயரிலான புதிய பட உருவாக்கத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதில் விவேக்கின் மனைவி மற்றும் தேசிய விருது வென்றவரான பல்லவி ஜோஷியும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், நடிகை பல்லவியின் மீது வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு வந்து மோதி உள்ளது.

இந்த சம்பவத்தில், பல்லவிக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. எனினும், படப்பிடிப்பில் காயத்துடன் கலந்து கொண்டு, அவருக்கான காட்சிகளை எடுத்த பின்னரே அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றிருக்கிறார். இதன்பின்பு, அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டுள்ளார். அவரது உடல்நிலை தேறி வருகிறது.

கொரோனா பெருந்தொற்று பரவலின்போது, அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, 2020-ம் ஆண்டு ஜனவரி 16-ந்தேதி இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் நேற்றுடன் 2 ஆண்டுகள் பூர்த்தியடைந்து உள்ளது.

கொரோனா தடுப்பூசியை தயாரிப்பதற்காக இரவும், பகலும் போராடி தனது வாழ்வின் 2 ஆண்டுகளை தியாகம் செய்த இந்திய விஞ்ஞானியின் வேடத்தில் பல்லவி நடிக்கிறார். படத்தில் பல உண்மையான விசயங்களை அடிப்படையாக கொண்டு காட்சிகள் எடுக்கப்படுகின்றன.

இதனால், முக்கிய வேடங்களில் நடிப்பவர்கள் பற்றி ரகசியம் காக்கப்படுகிறது. இந்த படம் வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி 11 மொழிகளில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்