தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயனுடன் மோதும் துல்கர் சல்மான்

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படமும் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படமும் தீபாவளி ரேஸில் மோத உள்ளது.

Update: 2024-08-20 18:23 GMT

சென்னை,

நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருகிறார். இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் துல்கர் சல்மான். இருப்பினும் கடந்த 2022ல் வெளியான சீதாராமம் திரைப்படம் இவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. துல்கர் சல்மானின் நடிப்பில் இறுதியாக வெளியான 'கிங் ஆப் கோதா' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, தக் லைப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான பின் அப்படத்திலிருந்து விலகினார்.

தற்போது, நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'லக்கி பாஸ்கர்' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக மீனாட்சி செளத்ரி நடித்திருக்கிறார். ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தை வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி இருக்கிறார். இப்படம் செப்டம்பர் 27 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இப்படம் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு சி.எச்.சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கலைவண்ணன் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'அமரன்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த இந்திய ராணுவ வீரரான முகுந்தன் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'அமரன்' திரைப்படமும், நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான 'லக்கி பாஸ்கர்' திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான 'லக்கி பாஸ்கர்' திரைப்படமும் சிவகார்த்திகேயனின் 'அமரன்' திரைப்படமும் தீபாவளி ரேஸில் மோத உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்