சூர்யாவுடன் நடிக்கும் துல்கர் சல்மான்
சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்க பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.;
சூர்யா சமீப காலமாக அழுத்தமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சூரரை போற்று, ஜெய்பீம் படங்கள் அவரது திரையுலக வாழ்க்கையில் முக்கிய படங்களாக பேசப்படுகின்றன. ஜெய்பீம் வெளிநாட்டு படங்களுக்கான ஆஸ்கார் விருது தகுதி பட்டியலில் இடம் பெற்று விருது பெறாமல் திரும்பியது. தற்போது ஆஸ்கார் அகாடமி அமைப்பின் உறுப்பினராக சூர்யா தேர்வாகி தமிழ் திரையுலகுக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாராட்டுகள் குவிந்துள்ளன. கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் கவுரவ தோற்றத்தில் வந்தார். சிறிது நேரமே சூர்யா நடித்த காட்சிகள் இடம்பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. பாலா, வெற்றி மாறன் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார். இந்த படங்களுக்கு பிறகு சூரரை போற்று படத்தை எடுத்த சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்க பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.