'சினிமாவில் போதைப்பொருள் தொடர்பான காட்சிகள்...' - நடிகர் சூரி கருத்து

சினிமாவில் போதைப்பொருள் தொடர்பான காட்சிகள் காட்டப்படுவது குறித்து நடிகர் சூரி கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-19 11:25 GMT

சேலம்,

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி 'பரோட்டா' சூரி என்ற பெயரில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் சூரி. இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விடுதலை' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் சூரியின் நடிப்புக்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதைத் தொடர்ந்து நடிகர் சூரி கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் துரை செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருடன்' படத்தில் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 31-ந்தேதி திரைக்கு வர உள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகர் சூரி ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சூரி கலந்து கொண்டு பேசினார். அப்போது 'விடுதலை' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும், இந்த படம் 'விடுதலை' முதல் பாகத்தை விட மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் நம்புவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து சினிமாவில் போதைப்பொருள் தொடர்பான காட்சிகள் குறித்து பேசிய அவர், "போதைப்பொருள் தொடர்பான காட்சிகள் வரும்போது திரையரங்குகளில் எச்சரிக்கை வாசகங்களை போடுகிறார்கள். போதைப் பழக்கத்தை நான் சரியென்று சொல்லமாட்டேன். ஆனால் கதைக்கு தேவைப்படுவதால் திரைப்படங்களில் காட்டப்படுகிறது. அதே போல் சினிமாவில் பல நல்ல விஷயங்களும் காட்டப்படுகின்றன. ரசிகர்கள் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும் என நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இளையராஜா-வைரமுத்து விவகாரம் தொடர்பாக சூரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "இருவர் பக்கமும் இருக்கும் நியாயம் குறித்து அவர்கள் பேசுகிறார்கள். அவர்களே அதை பார்த்துக் கொள்வார்கள். நாம்தான் இந்த விவகாரத்தை பெரிதாக்கிக் கொண்டே போகிறோம். அவர்களைப் பற்றி பேசும் அளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது."

இவ்வாறு நடிகர் சூரி தெரிவித்தார்.

Full View

 

Tags:    

மேலும் செய்திகள்