ஒற்றை கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சாடாதீங்க - இயக்குநர் மிஷ்கின் விளக்கம்

சில நேரங்களில் மேடையில் பேசும் போது ஒரு விஷயத்தை சுருக்கமாக சொல்ல தான் நேரம் இருக்கும் அப்படி சொல்வதை எடுத்துக் கொண்டு நான் பேசுவதை எல்லாம் சர்ச்சையாக்கி வருகிறார்கள் என்று மிஸ்கின் கூறினார்.

Update: 2024-05-13 15:30 GMT

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில் , இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடித்துள்ள படம் 'ஹிட்லிஸ்ட்'. சூர்ய கதிர் மற்றும் கார்த்திகேயன் என இருவர் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் சரத்குமார், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய மிஷ்கின், "போன மேடையில் கோயிலுக்கு போகாதீங்க சினிமாவுக்கு போங்க என நான் பேசியது சர்ச்சையானது. கோயில் எனச் சொன்னது சர்ச்சையும் மசூதியையும் சேர்த்துதான். நான் பிறந்த குடும்பம் இந்து, வளர்ந்த குடும்பம் முஸ்லீம், கல்யாணம் செய்தது கிருத்துவ குடும்பம். கோயிலுக்கு காலையிலே செல்கிறோம். தியேட்டர்கள் இன்றைக்கு வெறிச்சோடி கிடக்கிறது. இதுதான் நிஜம். ஏனென்றால் எல்லாமே ஒரு போனுக்குள் அடங்கிவிடுகிறது. அதனால் தியேட்டரை மறந்துவிடுகிறோம்.


ஏன் கோயில், சர்ச், மசூதியை விட சினிமா முக்கியம். இரண்டு பேராக உட்கார்ந்து டிவி பார்த்து விடலாம். ஆனால் நிறைய பேர் உட்கார்ந்து பார்த்தால்தான் அது கொண்டாட்டம். அது போல முதல் கொண்டாட்டம் என்பது தியேட்டர். கோயில், சர்ச், மசூதி இந்த மூன்றும் ஆன்மீகத்தை தேடவைக்கிறது. ஆனால் தியேட்டர், தார்மீகத்தைத் தேடவைக்கிறது. ஒரு மேடையில் எதையும் விளாவரியாக பேசமுடியாது. அதில் ஒற்றை கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சாடாதீங்க. கோயிலுக்கும், சர்ச்சுக்கும், மசூதிக்கும் போங்க. தியேட்டருக்கு அடிக்கடி போங்க" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்