தீபாவளிக்கு வரும் படங்கள்
விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்களை பொங்கல் பண்டிகைக்கு தள்ளி வைத்துள்ளனர். சர்தார், பிரின்ஸ் படங்களை தெலுங்கிலும் டப்பிங் செய்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெளியிட உள்ளனர்.;
தீபாவளி பண்டிகையில் பெரிய நடிகர்கள் படங்களை ரசிகர்கள் எதிர்பார்ப்பது வழக்கம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா உள்ளிட்டோரின் படங்கள் தீபாவளி பண்டிகைகளில் ஏற்கனவே வெளியாகி களை கட்ட வைத்துள்ளன. ஆனால் இந்த தீபாவளிக்கு அவர்களின் படங்கள் வெளியாகாதது ரசிகர்களுக்கு வருத்தம். விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்களை பொங்கல் பண்டிகைக்கு தள்ளி வைத்துள்ளனர். ரஜினியின் ஜெயிலர், கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன். ஆனாலும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்படுத்தாத வகையில் கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய 2 படங்கள் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வர உள்ளன.
கார்த்தி நடிப்பில் அடுத்ததடுத்து வெளியான விருமன், பொன்னியின் செல்வன் படங்கள் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சர்தார் அவருக்கு 3-வது வெற்றிப்படமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் கார்த்தி நடித்துள்ள வித்தியாசமான வயதான கதாபாத்திரம் வலைத்தளத்தில் வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது.
சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான டாக்டர், டான் ஆகிய 2 படங்களும் வெற்றிகரமாக ஓடி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் பார்த்துள்ளன. அதுபோல் பிரின்ஸ் படமும் வெற்றி பட்டியலில் இணையுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சர்தார், பிரின்ஸ் படங்களை தெலுங்கிலும் டப்பிங் செய்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெளியிட உள்ளனர். இவை தவிர சில மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களும் தீபாவளி பண்டிகையில் தமிழகத்தில் வெளியாக உள்ளன.
அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி உள்ள ராம் சேது இந்தி படத்தை தமிழில் டப்பிங் செய்து தீபாவளிக்கு வெளியிடுகிறார்கள். இலங்கைக்கு கடல் நடுவே கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் ராமர் பாலம் பற்றிய கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது. ராமர் பாலம் பற்றிய பல கேள்விகளுக்கு இந்த படத்தில் விடை சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல் அஜய்தேவ்கான் நடித்துள்ள தேங்க் காட், மலையாளத்தில் மோகன்லால் நடித்துள்ள மான்ஸ்டர், நிவின் பாலி நடித்துள்ள படவட்டு, தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ஓ மை கடவுளே படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஓரி தேவுடா ஆகிய படங்களும் தீபாவளிக்கு வெளியாக உள்ளன.