மீண்டும் தள்ளிப்போன 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கவுதம் மேனன்...!

'துருவ நட்சத்திரம்' திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-11-24 01:08 GMT

சென்னை,

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ரிது வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 24-ம் தேதி (இன்று) வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே, சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க கவுதம் மேனன், ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் ரூ.2.40 கோடியை பெற்றுள்ளதாகவும், ஆனால், படத்தையும் முடிக்கவில்லை பணத்தையும் திருப்பித் தரவில்லை என அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 2 கோடியை நாளை காலை 10.30 மணிக்குள் திரும்ப செலுத்திய பிறகு துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி வழங்கியது.

இந்நிலையில் இந்த படம் இன்று வெளியாகாது என்று படத்தின் இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'மன்னிக்கவும். துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்று திரைக்கு வரவில்லை. எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தோம். ஆனால் படத்தை ரிலீஸ் செய்ய இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது.

உலகெங்கிலும் முறையான முன்பதிவுகள் மற்றும் சரியான திரையிடல்கள் மூலம் உங்கள் அனைவருக்கும் நல்ல அனுபவத்தை தர விரும்புகிறோம். இந்த படத்திற்கான உங்களின் ஆதரவு எங்களை நெகிழ்ச்சியடைய வைக்கிறது. அது எங்களை மேலும் தொடர வைக்கிறது. இன்னும் சில நாட்களில் நாங்கள் வருவோம்' என்று பதிவிட்டுள்ளார்.

இந்த படத்திற்காக 5 ஆண்டுகள் காத்திருந்த ரசிகர்கள் இன்று படத்தை காண காத்திருந்தனர். இந்நிலையில் கவுதம் மேனன் வெளியிட்ட இந்த பதிவு ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்