முதல் நாள் வசூல்: 'தங்கலான்', 'டிமான்டி காலனி 2', 'ரகுதாத்தா'

நேற்று முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின.

Update: 2024-08-16 07:05 GMT

சென்னை,

இந்த சுதந்திர தினம் நமக்கு பலதரப்பட்ட படங்களை கொடுத்து ஒரு சினிமா விருந்தளித்திருக்கிறது. அதன்படி, நேற்று முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின. அவ்வாறு திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும்நிலையில், அதன் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பதை தற்போது காணலாம்.

1. 'தங்கலான்'

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்து ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படம் நேற்று வெளியானது.

கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் தங்கலான் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.12 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும், அதில் ரூ.11 கோடி தமிழ் நாட்டில் மட்டும் என்றும் கூறப்படுகிறது.

2. டிமான்டி காலனி 2

கடந்த 2015-ம் ஆண்டு அருள்நிதி, டிமான்ட்டி காலனி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து 'டிமான்ட்டி காலனி ' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது.

அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் நேற்று வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் முதல் நாளில் ரூ.3.5 கோடி வசூலித்துள்ளதாக தெரிகிறது.

3. 'ரகு தாத்தா'

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரகு தாத்தா'. இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் நேற்று வெளியானது.

இந்தி திணிப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் முதல் நாளில் ரூ.25 லட்சம் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானதால் குறைவான திரையரங்குகளில் மட்டுமே இப்படம் வெளியாகியுள்ளது.

இது தவிர ரவி தேஜா நடிப்பில் 'மிஸ்டர் பச்சன்' , ராம் பொத்தினேனி நடிப்பில் 'டபுல் ஐஸ்மார்ட்' மற்றும் இந்தியில் ,'ஸ்ட்ரீ 2' படங்களும் வெளியாகின. இதில், மிஸ்டர் பச்சன் ரூ. 5.3 கோடியும், டபுல் ஐஸ்மார்ட் ரூ. 7.5 கோடியும், ஸ்ட்ரீ 2 ரூ. 46 கோடியும் வசூலித்ததாக தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்