இணையத்தில் கசிந்த கூலி பட காட்சிகள்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட வேதனைப்பதிவு

பல பேரின் இரண்டு மாத கடின உழைப்பு ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-18 16:17 GMT

சென்னை,

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது திரைப்படமாக 'கூலி' பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, சுருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோர் இதில் நடிக்கின்றனர். 'தேவா' என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

கூலி படத்தினைப் பொறுத்தவரையில், படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகின்றது. அண்மையில் அங்கு கனமழை பெய்தபோதுகூட படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் கூலி படத்தின் படப்பிடிப்பின்போது சிறிய விபத்து ஏற்பட்டதாகவும், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் கூலி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா தொடர்பான படப்பிடிப்புக் காட்சிகளை இணையத்தில் மர்ம நபர்கள் வெளியிட்டனர். படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியானதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் பல பேரின் இரண்டு மாத கடின உழைப்பு ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "ஒரேயொரு விடியோ பதிவு மூலம் ஏராளமான திரைக் கலைஞர்கள் மற்றும் பணியாளர்களின் கடந்த இரண்டு மாத கால கடின உழைப்பு வீணாகிவிட்டது. இதேபோல படக்காட்சிகள் வெளியிடப்பட்டால், ஒட்டுமொத்த படத்தின் சுவாரசியத்தையும் கெடுத்து விடும். ஆகவே, இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென ஒவ்வொருவரையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி" என்று அதில் லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்