ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள ஆதிபுருஷ் படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ராமாயணத்தில் உள்ள கதாபாத்திரங்களை கேலி செய்வதுபோல் காட்சிகளும், வசனங்களும் உள்ளது என்றும் எனவே படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் அலகாபாத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி படத்தின் எழுத்தாளரையும் வழக்கில் சேர்த்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
"ராமாயணத்தை மக்கள் வீட்டில் இருந்து கிளம்பும் முன் படிப்பார்கள். அதில் உள்ள கதாபாத்திரங்களை புதிதாக வடிவமைக்க கூடாது. பொறுமையாக இருக்கும் மக்களை சோதிப்பீர்களா? படத்தில் உள்ள சர்ச்சை விஷயங்களை முதலிலேயே நீக்கி இருக்க வேண்டும். படத்தில் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய சில காட்சிகளும் உள்ளன. இதன் மீது தணிக்கை குழு என்ன நடவடிக்கை எடுத்தது'' என்று கோர்ட்டு கேள்விகள் எழுப்பி படக்குழுவினரை கண்டித்தது.
படத்தில் உள்ள ஆட்சேபகரமான வசனங்களை நீக்கிவிட்டதாக அரசு வக்கீல் தெரிவித்தார். அதற்கு நீதிபதி "அது மட்டும் போதாது காட்சிகளை ஏன் நீக்கவில்லை'' என்றார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.