சின்னத்திரை நடிகர் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமின்..!

சின்னத்திரை நடிகர் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-10-28 11:51 GMT

சென்னை,

சின்னத்திரை நடிகை திவ்யா தனது கணவர் அரணவ், கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் எந்த நேரத்திலும் தனது கரு கலையலாம் என கூறி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதன்பேரில் போருர் அனைத்து மகளிர் போலீசார் அரணவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து கடந்த 14-ம் தேதி பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அர்ணவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து 15 நாள் காவலில் வைக்க அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் நடிகர் அர்ணவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சிறையில் இருந்த அர்ணவ் தனக்கு ஜாமின் வேண்டும் என தனது வழக்கறிஞர் மூலம் பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

இந்த நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அர்ணவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த மனுவை குடும்ப வழக்காக பார்க்க வேண்டும், குற்ற வழக்காக பார்க்க கூடாது என முன்வைத்து வாதாடினர். இதையடுத்து நடிகர் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்