'கைதி'யை இன்னொருமுறை மறுபார்வை பார்த்துவிட்டு 'விக்ரம்' உலகுக்கு வாருங்கள் - லோகேஷ் கனகராஜ்

விக்ரம் படம் இன்று வெளியாக உள்ள நிலையில் லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Update: 2022-06-02 18:30 GMT

சென்னை,

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியாக இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்ரம் திரைப்படம் இன்று (ஜூன் 3-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் கைதியைப் பார்த்துவிட்டு விக்ரம் உலகத்துக்கு வாருங்கள் என்று லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இதுவரை பட வெளியீட்டுக்கு முன் நான் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை. நினைவு தெரிந்த நாள் முதல் என் சின்ன வயதிலிருந்தே "உலகநாயகன்" ரசிகனாகவே இருந்திருக்கிறேன், இன்றைக்கு அவரது படத்தை இயக்கியிருக்கிறேன், இன்னமும் இது ஒரு கனவைப் போலிருக்கிறது.

இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற எனக்குத் துணை நின்ற நல்லுள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். விக்ரம் பட வேலைகளைத் தொடங்கிப் பதினெட்டு மாதங்கள் ஆகின்றன. ரத்தமும் வியர்வையும் சிந்தி (உண்மையாகவும் கூட) ரசிகர்களான உங்களை மகிழ்விக்கவும், ஒரு மனிதரை, நம் நாட்டின் பெருமிதத்தை, "உலகநாயகன்" கமல்ஹாசனைக் கொண்டாடவும் உழைத்திருக்கிறோம்.

வாய்ப்புக்கு நன்றி சார், இந்தத் திரைப்படம் உங்கள் ரசிகனிடமிருந்து உங்களுக்கான பரிசாக வருகிறது! இதை நான் என்றென்றும் மகிழ்வுடன் நினைவில் சேமித்திருப்பேன்! என் அன்பான ரசிகர்களுக்கு, இன்னும் சில மணிநேரங்களில் விக்ரம் திரைப்படம் முழுக்க உங்கள் சொந்தமாகிவிடும். அது உங்களை மகிழ்வித்து, மறக்கமுடியாத மகத்தான திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்! "கைதி"யை இன்னொருமுறை மறுபார்வை பார்த்துவிட்டு "விக்ரம்" அழைத்துச் செல்லும் உலகுக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.




Tags:    

மேலும் செய்திகள்