'வருகிறான் சோழன்' - பொன்னியின் செல்வன் அப்டேட்..!

பொன்னியின் செல்வன் படக்குழு 'வருகிறான் சோழன்' என்ற வாசகத்துடன் கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

Update: 2022-07-02 08:54 GMT

சென்னை,

ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் முதல் பாகமான "பொன்னியின் செல்வன்-1" வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கெனவே அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது.

சமீபத்தில் வெளியான இப்படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அதன்படி, வருகிறான் சோழன் என்ற வாசகத்துடன் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையுடன் கூடிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்