'விஜய் சேதுபதியை தாக்கினால் பரிசு…' என பதிவிட்ட அர்ஜுன் சம்பத்திற்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!
நடிகர் விஜய் சேதுபதியை தாக்கினால் பரிசு என்று சமூக வலைதளத்தில் பதிவிட்ட, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மகாராஜா திரைப்படம் இன்று வரையிலும் பேசப்படுகிறது.
நடிகர் விஜய் சேதுபதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பற்றி தவறாக பேசியதாக, இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், தனது எக்ஸ் பக்கத்தில், "தேவர் ஐயாவை இழிவு படுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப் பரிசு ரூபாய் 1001 வழங்கப்படும்" என்று 2021-ம் ஆண்டு பதிவிட்டிருந்தார்.
அர்ஜுன் சம்பத்தின் இந்த பதிவு, விஜய் சேதுபதி ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி கொந்தளிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
இதன் காரணமாக கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ஜுன் சம்பத் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் அர்ஜுன் சம்பத்திற்கு ரூ. 4000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.