தமிழ் திரையுலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் இல்லையா? நடிகர் ஜீவாவுக்கு சின்மயி கேள்வி

தமிழ்திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் இல்லை என நடிகர் ஜீவா எப்படி கூறுகிறார் என்று தெரியவில்லை என சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2024-09-02 11:06 GMT

சென்னை,

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானபின், மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். அதற்கு ஏற்ப குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

தேனியில் உள்ள தனியார் ஜவுளிக்கடை திறப்பு விழாவில் நடிகர் ஜீவா கலந்து கொண்டார். அங்கு வந்த நடிகர் ஜீவாவிடம், செய்தியாளர்கள் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்தும் கேரளா திரையுலக பாலியல் புகார் குறித்தும் தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டதாகவும் விளக்கம் அளித்து விட்டதாகவும் தமிழக திரைப்பட உலகில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இல்லை என்றும் நடிகர் ஜீவா பதிலளித்தார். ஆனால், அவரை விடாமல் கேரள திரையுலக பாலியல் சர்ச்சை குறித்து செய்தியாளர்களில் சிலர் கேள்வி எழுப்பிய வண்ணமே இருந்தனர். ஒரு நல்ல நிகழ்வில் மீண்டும், மீண்டும் அது குறித்து கேட்க வேண்டாம் எனக் கூறினார் நடிகர் ஜீவா.

அவரைவிடாமல் சில செய்தியாளர்கள் அதே கேள்வியை கேட்கவே, ஒரு குறிப்பிட்டஊடகவியல் செய்தியாளரை பார்த்து, அறிவு இருக்கிறதா? எந்த இடத்தில் எந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று கூட தெரியாமல் இருக்கிறீர்களே? என்று வருத்தத்தோடு கிளம்பிச் சென்றார் நடிகர் ஜீவா.

நடிகர் ஜீவாவின் இந்த பேட்டி தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள பாடகி சின்மயி, "தமிழ்திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் இல்லை என எப்படி கூறுகிறார் என்று தெரியவில்லை" என தெரிவித்துள்ளார். தொடர்ந்து சினிமாவில் பல விஷயங்களை கேள்வி எழுப்பி வரும் சின்மயி, இந்த விஷயத்திலும் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்