ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி விவகாரம்; நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தின் கடிதத்தில் வெளியான தகவல்

இசை நிகழ்ச்சியில் குறைவான காவலர்கள் பணியாற்றியதால் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Update: 2023-09-14 00:48 GMT

சென்னை,

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி 10-ந்தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிச் சென்று உள்ளே நுழைய முடியாமல் பல ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீதும் சமூக வலைதளங்களில் சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதே சமயம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் கார்த்தி, நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இந்த இசை நிகழ்ச்சியை நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே இசை நிகழ்ச்சிக்கு அனுமதிகேட்டு காவல்துறைக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கியுள்ள கடிதத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும் இதனால் 20 ஆயிரம் பேர் மட்டும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் வேலையில் ஈடுபடவுள்ளதாகவும் காவல்துறை இந்த நிகழ்ச்சிக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், மேலும் டிக்கெட் விற்பனை செய்தது குறித்து எந்த தகவலும் தெரிவிக்காததால் குறைவான காவலர்கள் பணியாற்றியதாகவும், இதன் காரணமாக குளறுபடி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தாம்பரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்