வீட்டிற்கு வந்து ஸ்கிரிப்டை படிக்க சொன்ன மர்ம நபர் - நினைவு கூர்ந்த அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப், மர்ம நபர் ஒருவர் வீட்டிற்கு வந்து கதை படிக்க கூறியதாக கூறினார்.;
மும்பை,
இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் லக் பை சான்ஸ், பூத் நாத் ரிட்டர்ன் போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.
அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான 'லியோ' படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் அனுராக் காஷ்யப், மர்ம நபர் ஒருவர் வீட்டிற்கு வந்து கதை படிக்க கூறியதாக கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,
'ஒருமுறை நபர் ஒருவர் என் வீட்டிற்கு வந்தார். சார், என் ஸ்கிரிப்டைப் படியுங்கள் என்றார். உடனே நான் நீங்கள் யார் என்று கேட்டேன். ஆனால், அவர் அதற்கு பதிலளிக்காமல் ஸ்கிரிப்டைப் படியுங்கள் என்று மட்டுமே கூறினார். பின்னர் தொடர்ந்து கேட்ட பிறகு, அவரது தந்தை இப்போது இல்லை என்றார். அதனைத்தொடர்ந்து அந்த நபரின் மறைந்த தந்தைக்கு எனது இரங்கலைத் தெரிவித்து அவரை அணுப்பி வைத்தேன். இது போன்ற விஷயங்கள் எனக்கு தொடர்ந்து நடக்கின்றன,' என்றார்.