சினிமா துறையில் வெடிக்கும் பூகம்பம் - நடிகைகள் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

நடிகைகள் அமலாபால், ராய் லட்சுமி உள்ளிட்டோர் மீது தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்க கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-01 14:29 GMT

சென்னை,

நடிகைகள் அமலாபால், ராய் லட்சுமி உள்ளிட்டோர் மீது தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்க கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மீது தயாரிப்பாளர்களால் வைக்கப்பட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் முக்கிய நடிகர்கள் நடிகைகள் மீது தயாரிப்பாளர்கள் பகிரங்கமாக புகார்களை தெரிவித்தனர்.

குறிப்பாக தேனாண்டாள் ஃபிலிம்ஸ் சார்பாக நடிகர் தனுஷ் ஒரு படத்தை நடிப்பதாக இருந்ததாகவும் அதற்காக ஒரு மாதத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படம் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. எனவே இந்த படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் சார்பாக நடிகர் தனுஷ் மீண்டும் நடித்து தர வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பில் நடிகர் சங்க நிர்வாகிகளிடம் முறையீடு செய்யப்பட்டது. மேலும் நடிகர் தனுஷிற்கு இந்த படத்திற்காக 20 கோடி ரூபாய் அட்வான்ஸ் தரப்பட்டதாகவும் முறையிடப்பட்டது.

மேலும் நடிகைகள் ராய் லட்சுமி, அமலா பால் உள்ளிட்ட முக்கிய நடிகைகளின் மீது தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்தனர். பிரபலமான நடிகைகள் படப்பிடிப்புக்கு வரும் போது பாதுகாவலர்களாக 10-க்கும் மேற்பட்டோரை நியமிப்பதாகவும் பாதுகாவலர்களுக்கு சம்பள தொகையாக அதிக பணம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் தயாரிப்பாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

இனிவரும் காலங்களில் நடிகைகளின் பாதுகாவலர்களுக்கு தயாரிப்பாளர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் சம்பளம் வழங்க மாட்டோம் என்றும் நடிகைகளே அவர்களது பாதுகாவலர்களுக்கு சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகைகள் பங்கேற்பதில்லை என்றும் இதற்கும் சேர்த்து தான் சம்பளம் தரப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

முக்கிய நடிகைகள் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காததால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, இனிவரும் காலங்களில் நடிகைகள் இசை வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா என அனைத்து புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த புகார்கள் குறித்து பரிசீலனை செய்து ஒரு வாரத்திற்குள் பதில் அளிப்பதாக நடிகர் சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.Full View

Tags:    

மேலும் செய்திகள்