கடவுள் ராமராக நடித்தவரின் காலில் விழுந்த பெண்ணுக்கு ஆசி வழங்கிய நடிகர்
பிரபல ராமாயண தொடரில் கடவுள் ராமராக நடித்தவரின் காலில் விழுந்த பெண்ணுக்கு நடிகர் ஆசி வழங்கிய வீடியோ வைரலாகி உள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் தொலைக்காட்சி பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்ட தொடக்க காலத்தில், 1980-ம் ஆண்டின் பிற்பகுதியில் ராமாயணம் தொடர் மக்களிடையே பிரபலம் அடைந்தது. அதில், ராமர், சீதா மற்றும் லட்சுமணன் ஆகிய வேடங்களை ஏற்று நடித்தவர்கள் கடவுள்களுக்கு இணையாக நடத்தப்பட்டனர்.
40 ஆண்டுகள் கடந்த பின்னர், கொரோனா ஊரடங்கு காலத்தில் 2020-ம் ஆண்டில் மீண்டும் தொலைக்காட்சியில் ராமாயண தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், ராமர் வேடம் ஏற்று நடித்த அருண் கோவில் என்பவர் கூறும்போது, மக்கள் இன்னும் தன்னை அருண் கோவில் என அழைப்பதற்கு பதிலாக ராம் என்றே குறிப்பிடுகின்றனர் என கூறியுள்ளார்.
அவர் விமான நிலையம் ஒன்றில் தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார். அவரை கண்டதும் பெண் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு உள்ளார். அவர், அருண் கோவிலின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அந்த பெண்ணுடன் வந்த கணவரிடம், என்ன இது, அவரை எழுந்திரிக்க சொல்லுங்கள் என அருண் சைகை காட்டுகிறார்.
இதன்பின்னர், அந்த பெண்ணின் கழுத்தில் அருண் கோவில், துப்பட்டா ஒன்றை அணிவித்து ஆசி வழங்கினார். இதுபற்றிய வீடியோ ஒன்று டுவிட்டரில் வெளிவந்து வைரலாகி வருகிறது.