தெலுங்கு நடிகருடன் எனக்கு திருமணமா? நடிகை லாவண்யா விளக்கம்
தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பரவிய வதந்திக்கு நடிகை லாவண்யா விளக்கம் அளித்துள்ளார்.;
தமிழில், சசிகுமாருடன் 'பிரம்மன்', சந்தீப் கிஷனுடன் 'மாயவன்' படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் லாவண்யா திரிபாதி. தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜும் லாவண்யா திரிபாதியும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. வருண் தேஜ் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான நாகபாபுவின் மகன். வருணும் லாவண்யாவும் மிஸ்டர், அந்தரிஷம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக பேசப்பட்டது. இந்த நிலையில் காதல் கிசுகிசுவுக்கு லாவண்யா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ''நானும் வருண் தேஜும் காதலிப்பதாகவும் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வெளியான தகவலில் உண்மை இல்லை. வதந்தி. வருண் தேஜுடன் இணைந்து 2 படங்களில் நான் நடித்துள்ளதால் எங்களுக்குள் காதல் என்ற வதந்தியை பரப்பி உள்ளனர். யாரையும் நான் காதலிக்கவில்லை" என்றார்.