'புஷ்பா: தி ரூல்': அல்லு அர்ஜூனின் லேட்டஸ்ட் லுக் சமூகவலைதளங்களில் வைரல்!
நடிகர் அல்லு அர்ஜூன் 'புஷ்பா: தி ரூல்' படத்தின் செட்டிலிருந்து ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.;
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா: தி ரைஸ்'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.
'புஷ்பா: தி ரைஸ்' படத்திற்காக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா: தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றன.
இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் இன்ஸ்டாகிமில் 'புஷ்பா: தி ரூல்' படத்தின் செட்டிலிருந்து ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அல்லு அர்ஜூன் வீட்டிலிருந்து படப்பிடிப்பு செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஐதராபாத் புறநகரில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள 'புஷ்பா: தி ரூல்' படத்தின் பிரமாண்டமான செட்டை, அவர் அந்த ரீல்சில் பகிர்ந்துள்ளார்.
ராமோஜி பிலிம் சிட்டியில் அவரைக் காண காத்திருந்த ரசிகர்கள் அல்லு அர்ஜூனுக்கு உற்சாக வரவேற்பளிக்கும் காட்சிகளும் அதைத் தொடர்ந்து அவர் 'புஷ்பராஜாக' மாறி படப்பிடிப்பில் கலந்து கொண்ட காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.