நடிகர் சோனு சூட்டின் பேச்சை கேட்டு... காறி துப்பிய தொழிலாளி; வைரலான வீடியோ

நடிகர் சோனு சூட்டின் பேச்சை கேட்டு தொழிலாளி ஒருவர் காறி துப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.

Update: 2023-01-16 08:23 GMT



புனே,


கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கு நிதி உதவி, பஸ் வசதி உள்பட பல உதவிகளை வழங்கி, பெரும் பங்காற்றியவர் பாலிவுட் நடிகர் சோனு சூட்.

இதனால், நாடு முழுவதும் பிரபலமடைந்தவர். தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவ தனியாக அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். திரைப்பட ஆசையில் மும்பைக்கு வருபவர்களுக்கு உதவ தனி மையம் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார்.

இதனால், அவர் செய்ய கூடிய விசயங்கள் மக்களிடையே அதிகம் ஈர்ப்பு பெற்றுள்ளது. சமீபத்தில், சோனு சூட் ரெயிலின் வாசலில் அமர்ந்து மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்வது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டது சர்ச்சை ஏற்படுத்தியது.

இதற்கு வடக்கு ரெயில்வே நிர்வாகம் மற்றும் மும்பை ரெயில்வே போலீஸ் கமிஷனர் டுவிட்டரில் பதிவை வெளியிட்டனர். அதில், சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய நீங்கள், இதுபோன்ற ஆபத்து விளைவிக்கும் செயல்களில் ஈடுபடலாமா? என கேள்வி எழுப்பினர்.

எனினும், லட்சக்கணக்கான மக்கள் இன்னும் வாசற்படியிலேயே பிரயாணம் செய்யும் முறையை தானும் அனுபவித்து பார்க்க விரும்பினேன் என்று அவர் பதிலுக்கு பதிவிட்டார்.

கல்வி மற்றும் மருத்துவ வசதி கிடைக்கப்பெறாத ஏழை மக்களுக்கு உதவும் அவரது அறப்பணி தொடர்ந்து வரும் வேளையில், சமீபத்தில் மற்றொரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், தேநீர் கடை ஒன்றில் நின்று கொண்டு அவர் தொழிலாளர்கள் சிலருடன் உரையாடி கொண்டிருக்கிறார். அப்போது, அவர்களை நோக்கி வாழ்வதற்காக என்ன செய்கிறீர்கள்? என கேட்கிறார்.

அவர்களில் ஒருவர் குட்கா, பான்மசாலா போன்றவற்றை சுவைத்து கொண்டிருக்கிறார். அதனை கவனித்த சோனு சூட், குட்கா சாப்பிட்டு கொண்டிருக்கிறீர்களா? என கேள்வி எழுப்புகிறார்.

அந்த தொழிலாளியும் பதிலுக்கு ஆம் என்கிறார். முதலில் போய் அதனை துப்பி விட்டு வாருங்கள் என சோனு அறிவுரை வழங்குகிறார். இதனை கேட்டு அந்த தொழிலாளி சற்று தொலைவிற்கு செல்கிறார்.

உடனே, சோனு சூட், அப்படியே ஓடி விடாதீர்கள் என கூறுகிறார். இதன்பின் அந்த தொழிலாளி வாயில் இருந்த குட்காவை சாலையோரம் துப்பி விட்டு திரும்புகிறார்.

அவரிடம் சோனு அன்புடன், குட்காவை எல்லாம் சாப்பிடாதீர்கள். உங்களது குடும்பத்துக்காக அதனை தியாகம் செய்யுங்கள். ஏனெனில், அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என கூறுகிறார். இந்த பக்கம் திரும்பி கடைக்காரரிடம், அந்த நபருக்கு குட்கா கொடுக்காதீர்கள் என சோனு கேட்டு கொள்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்