என் காதலை 2 நாள் கழித்தே, மஞ்சிமா மோகன் ஏற்றார் - நடிகர் கவுதம் கார்த்திக் பேட்டி
என் காதலை 2 நாள் கழித்தே, மஞ்சிமா மோகன் ஏற்றார் என நடிகர் கவுதம் கார்த்திக் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.;
தமிழில் 'கடல்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கவுதம் கார்த்திக் தொடர்ந்து 'ரங்கூன், முத்துராமலிங்கம், இவன் தந்திரன், மிஸ்டர் சந்திரமவுலி' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவரும், நடிகை மஞ்சிமா மோகனும், 'தேவராட்டம்' படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. 'அச்சம் என்பது மடமையடா, துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர்.' உள்ளிட்ட படங்களிலும் மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.
இவர்கள் திருமணம் வருகிற 28-ந் தேதி சென்னையில் நடக்கிறது. மஞ்சிமாவுடன் காதல் மலர்ந்தது குறித்து கவுதம் கார்த்திக் அளித்துள்ள பேட்டியில், ''மஞ்சிமா மோகனும் நானும் ஒரு வருடம் நட்பாகத்தான் பழகினோம். அவரது தனித்துவமான குணம் எனக்கு பிடித்ததால் நான்தான் முதலில் காதலை வெளிப்படுத்தினேன். அவர் யோசித்து பதில் சொல்வதாக சொன்னார். இரண்டு நாட்கள் கழித்தே எனது காதலை ஏற்றுக்கொண்டார். 3 வருடங்களாக காதலித்தோம். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். இருவீட்டு பெற்றோரும் ஏற்றுக்கொண்டனர். திருமணம் எளிமையாக நடக்கும். திருமணத்துக்கு பிறகும் மஞ்சிமா சினிமாவில் நடிக்கலாம். மஞ்சிமா அழகான பெண் மட்டுமல்ல, வலிமையானவர். வெப் தொடர்களில் நடிக்கவும் எனக்கு ஆர்வம் உள்ளது" என்றார்.