தோழர் சேகுவேரா படத்தில் 'அடங்கமறு அத்துமீறு...' பாடல் - நடிகர் சத்யராஜ்

தோழர் சேகுவேரா படம் செப்டம்பர் 20-ந்தேதி ரிலீஸ் ஆவதில் தடங்கல் இல்லை என்று நடிகர் சத்யராஜ் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.

Update: 2024-08-11 11:53 GMT

சத்யராஜ் நடிப்பில் அனிஷ் எட்மண்ட் பிரபு தயாரிப்பில் அலெக்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தோழர் சேகுவேரா. இப்படத்தில் மொட்டை ராஜேந்தர், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களோடு படத்தின் இயக்குநர் அலெக்ஸ் மற்றும் தயாரிப்பாளர் அனிஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.

விழாவில் சத்யராஜ் பேசுகையில், "நான் இதுவரை 250 படங்களில் நடித்துள்ளேன். என்னுடைய படங்கள் வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும் நடிப்பு என்ற பணியில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். அதில் பெருமைக்குரிய வகையில் நடித்தது தந்தை பெரியாராக நடித்ததுதான். சில பெயர்களை தாங்கி நடிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும், அதுபோல எம்.ஜி.ஆர். மகன் என்ற படத்தில் நான்தான் எம்.ஜி.ஆர். ஆனால் தோழர் சேகுவேராவுடன் என்னை எந்த வகையிலும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. ஏற்கனவே தோழர் சேகுவேரா கெட்டப்பில் 'புரட்சிக்காரன்' என்ற படத்தில் நடித்துள்ளேன். ஆனால் அந்த பேரில் நடிப்பது என்பது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியான ஒன்றுதான்.

இந்த படத்தில் என்னை 'அடங்கமறு அத்துமீறு...' என்ற பாடலை பாடச் சொன்னார்கள். இந்த பெருமைக்குரிய புரட்சிகரமான பாடலை பாடியதில் எனக்கு மகிழ்ச்சி.இந்த மாதிரியான படங்கள் வரும்போது சமூக மாற்றம் ஏற்படும். 'பராசக்தி' படம் தொடங்கி தற்போது பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் எல்லோரும் பிரமாதமான சமூக கருத்துகளை கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தில் என்னதான் சென்சார் குழு சில வசனங்களை நீக்கி இருந்தாலும் சொல்லவேண்டிய கருத்துகள் மக்களிடம் போய்சேரும் .

சென்சார் போர்டில் கட்செய்யப்பட்ட எல்லா காட்சிகளும் இங்கு காண்பிக்கப்பட்டது. படத்திலும் எல்லா சீன்களும் உள்ளன. ஆனால் வசனங்கள் வேறு. சென்சார் விதிக்கு உட்பட்ட வசனங்கள் பேசப்பட்டுள்ளது. மீண்டும் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் 20-ந்தேதி படம் ரிலீஸ் ஆவதில் தடங்கல் வந்துவிடுமோ என வினியோகஸ்தரர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. சென்சாரில் என்ன சொல்லப்பட்டதோ அதை மாற்றி செய்து விட்டோம். " என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்