அமெரிக்காவில் உள்ள முன்னணி வங்கிகளான சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகிய இரண்டும் திவால் ஆகிவிட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இது அமெரிக்க பொருளாதாராத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து இந்த வங்கிகள் மூடப்பட்டதால் அவற்றில் பணம் போட்டு வைத்திருந்த பொதுமக்கள் அவற்றை இழந்து தவிப்பில் உள்ளார்கள்.
தற்போது பிரபல ஹாலிவுட் நடிகை ஷ்ரோன் ஸ்டோனும் திவாலான வங்கியில் அதிக தொகையை டெபாசிட் செய்து தற்போது அவற்றை இழந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர் டோட்டல் ரீகால், கேசினோ, பேஸிக் இன்ஸ்டிங்ட் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
ஷ்ரோன் ஸ்டோன் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புற்றுநோய் ஆராய்ச்சிக்கு நிதி வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது, "சம்பாதித்த பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை நான் தெரிந்து வைத்து இருக்கிறேன். ஆனாலும் நாம் எதிர்பார்க்காத விஷயங்கள் சில நேரம் நடந்து விடுகின்றன. நான் சிலிக்கான் வேலி வங்கியில் நிறைய தொகையை முதலீடு செய்து வைத்து இருந்தேன். அது திவாலான காரணத்தால் என்னிடம் இருந்த மொத்த பணத்தில் பாதியை இழந்து விட்டேன்'' என்றார்.