தினம் ஒரு தகவல் : நடிகை பானுமதியின் திரையுலக பயணம்

நடிகை என்பது மட்டுமின்றி இயக்குனர்,பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல பரிமாணங்களுடன் புகழ் பெற்றார். அவர்தான் பானுமதி.

Update: 2022-12-09 06:17 GMT

1939-ம் ஆண்டு வரவிக்கிரயம் என்னும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு கல்கத்தாவில் (இப்போது கொல்கத்தா) நடந்துகொண்டிருந்தது. அது ஒரு முக்கியமான சோக காட்சி.

அந்த படத்தின் நாயகியான 13 வயது சிறுமிக்கு அந்த சோக காட்சியில் நடிக்க இயலவில்லை. அழுகை வரவில்லை. இயக்குனர் சி.புல்லையா, அந்த சிறுமியை நோக்கி கத்தினார். பயந்துபோன அந்தச் சிறுமி அழுதிருக்கிறார். அந்த காட்சி வெற்றிகரமாக படமாக்கப்பட்டது.

அந்த 13 வயது சிறுமிதான், பின்னாளில் தென்னிந்திய சினிமாவின் முக்கிய ஆளுமையாக வலம் வந்தார். நடிகை என்பது மட்டுமின்றி இயக்குனர்,பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல பரிமாணங்களுடன் புகழ் பெற்றார். அவர்தான் பானுமதி.

செப்டம்பர் 7, 1925 அன்று இன்றைய ஆந்திராவில் உள்ள தொத்தாவரம் என்னும் சிற்றூரில் பொம்மராஜூ வெங்கடசுப்பையா - அம்மனியம்மா தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். பானுமதி சிறு வயதிலேயே இசை ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய தந்தை அவருக்கு கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றுக்கொடுத்தார். தன்னுடைய மகளின் குரல் இந்தியா முழுவதும் கேட்க வேண்டும் என்பதே பொம்மராஜூ லட்சியமாக இருந்தது.

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து மாலதி மாதவன், தர்மபத்தினி போன்ற பல தெலுங்கு படங்களில் நடித்தார். அவர் படப்பிடிப்புக்காக சென்னை வந்தார். அப்போதுதான் அங்கு உதவி இயக்குனராக இருந்த பலுவை ராமகிருஷ்ணாவை பானுமதி சந்தித்தார். இருவரும் காதல் வயப்பட்டனர். இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதன் பின்னால் பெற்றோரின் ஆசியும் அவர்களுக்கு கிடைத்தது.

திருமணத்திற்கு பிறகு நடிக்கக்கூடாது என பானுமதி முடிவெடுத்து இருந்தார். ஆனால் பி.என்.ரெட்டி தன்னுடைய ஸ்வர்க்க சீமா என்னும் படத்தில் பானுமதிதான் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ராமகிருஷ்ணாவும் இதை கடைசி படமாக நினைத்து நடித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதன் பேரில் பானுமதி சம்மதித்தார். ஆனால் அந்த படத்தின் மாபெரும் வெற்றி, பானுமதிக்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்கியது. அவர் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். தமிழில் ரத்னகுமார் படத்தில் பி.யூ.சின்னப்பாவுடனும், முக்தி படத்தில் தியாகராஜ பாகவதருடனும் நடித்திருந்தார்.

இச்சமயத்தில் பானுமதியும் அவர் கணவரும் இணைந்து படம் தயாரிக்க முடிவெடுத்தனர். 1947-ல் வெளிவந்த ரத்னமாலா அவர்களின் தயாரிப்பில் வந்த முதல் படம். 1952-ல் அவர்கள் பரணி ஸ்டூடியோவை தொடங்கினர். பானுமதி இயக்கிய முதல் திரைப்படம் சண்டிராணி. இது தமிழ், தெலுகு, இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்டது. பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளால் கவுரவிக்கப்பட்டார். தன் சினிமா பங்களிப்புக்காக பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியற்றியுள்ளார். பானுமதி டிசம்பர் 25, 2005 அன்று காலமானார். நடிப்பு மட்டுமின்றி மாசிலா உண்மை காதலி, பூவாகி காயாகி கனிந்த மரமொன்று போன்ற பல பாடல்கள் இன்றைக்கும் பானுமதிக்கு மங்காத புகழை தேடித்தந்து கொண்டிருக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்