நடிகர் விஜய் மற்றும் விஷால் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் - இயக்குநர் ஹரி
சினிமா என்றும் அழியாது என்பதற்கு 'கில்லி' படத்தின் மறு ரிலீஸை மக்கள் கொண்டாடுவதே சாட்சி, நல்ல சினிமாவைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.;
இயக்குநர் ஹரியின் 17வது திரைப்படமான 'ரத்னம்' திரைப்படத்தில் நடிகர் விஷால் நடித்துள்ளார். இதில் பிரியா பவானி சங்கர், யோகி பாபு, கெளதம் வாசுதேவ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடத்துள்ளனர். தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் 'ரத்னம்' படத்தின் ப்ரோமோஷன் காட்சி வெளியிடப்பட்டது. இதில் இயக்குநர் ஹரி கலந்து கொண்டு தியேட்டருக்கு வந்த பொதுமக்களுடன் அமர்ந்து ப்ரோமோஷனை பார்த்து ரசிகர்களிடம் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ஹரி, "இது எனக்கு 17வது படம். இந்தப் படத்தின் கதை ஆந்திர மாநிலம் வேலூர், சித்தூர் மற்றும் தமிழ்நாடின் திருத்தணி பகுதிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக வடமாவட்டங்களை மையமாக வைத்து படம் எடுத்துள்ளோம். நடிகர் விஷாலின் 'மார்க் ஆண்டனி' வெற்றிப்படமாக அமைந்தது. அதே போல் இந்த படமும் வெற்றிப் படமாக அமையும்" என்றார்.
மேலும், "யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு நல்லது செய்தால் மகிழ்ச்சி. நடிகர் விஜய் மற்றும் விஷால் அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளனர். வரவேற்கிறேன். எனது படங்களின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் எண்ணம் இல்லை. விரைவில் போலீஸ் கதை அம்சம் கொண்ட படத்தை எடுக்க உள்ளேன். திரையரங்குகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஓடிடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் சினிமாவுக்கு கூடுதல் பலம் தான்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நடிகர் விஜய் நடித்த 'கில்லி' திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'கில்லி' படத்திற்கு கூடியுள்ள கூட்டம் சினிமா எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை காட்டுகிறது. நல்ல சினிமாவைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை காட்டுகிறது." என்றார்.