ஆசையாய் சால்வை கொடுக்க வந்த முதியவர்: வெறுப்புடன் தூக்கி எறிந்த நடிகர் சிவக்குமார்

சிவக்குமார் பொது நிகழ்வுகளில் இது போன்று நடந்து கொள்வது ரசிகர்களை கோபமடைய வைக்கிறது.

Update: 2024-02-26 08:11 GMT

சென்னை,

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் சிவக்குமார் (வயது 82). கதாநாயகன், குணச்சித்திரம் என 175க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர், சொற்பொழிவாளர், மேடை பேச்சாளர் ஆவார். இவர் 1965-ம் ஆண்டு காக்கும் கரங்கள் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

இவரது மகன்களான சூர்யா, கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக உள்ளனர். இந்தநிலையில், படங்களில் நடிக்காவிட்டாலும் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் மட்டும் சிவகுமார் பங்கேற்று வருகிறார். அப்படி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவர் நடந்து கொள்ளும் விதம் தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது.

ஏற்கனவே ரசிகர் ஒருவர் தன்னுடன் செல்பி எடுக்க முயன்றபோது போனை தட்டிவிட்டார். இது வைரலாகி அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்த சிவகுமார் அந்த ரசிகருக்கு புதிய செல்போன் வாங்கி தந்தார். அதேபோல் இன்னொரு நிகழ்ச்சியில் மற்றொரு ரசிகர் அவருடன் செல்பி எடுக்க முயன்றார், அப்போதும் தட்டிவிட்டார்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ.கருப்பையா எழுதிய "இப்படித்தான் உருவானேன்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் மற்றும் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியின் முடிவில் விழாவில் கலந்து கொண்ட சிவகுமாருக்கு வயதான முதியவர் ஒருவர் ஆசையாய் ஓடி வந்து சால்வை கொண்டு வந்து கொடுத்தார். அதை பிடுங்கி வெறுப்புடன் தூக்கி வீசி எறிந்துவிட்டு சென்றார் சிவகுமார். அந்த இடத்திலேயே அந்த முதியவர் மனம் நொந்து போனார்.

இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து சிவகுமார் பொது நிகழ்வுகளில் இதுபோன்று நடந்து கொள்வது ரசிகர்கள் இடையே கோபத்தை வர வழைத்துள்ளது. அவருக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்