தூத்துக்குடியில் நிவாரண பொருட்களை வழங்கிய நடிகர் பிரஷாந்த்.. அரசுக்கு முக்கிய கோரிக்கை...!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகையை வழங்கி வருகிறது.
தூத்துக்குடி,
தமிழகம் வரலாறு காணாத மழைப்பொழிவை கடந்த மாதம் சந்தித்தது. முதலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், பின்னர் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்தது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
இதில் வீடுகள், சாலைகள், பல்வேறு கட்டமைப்புகள் என அதிக அளவிலான சேதங்கள் ஏற்பட்டன. மேலும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் இறந்தன. இதனையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகையை வழங்கி வருகிறது.
சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார். மேலும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அமைப்பினர்கள் தொடர்ந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் பிரஷாந்த் தூத்துக்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்ட சுமார் 1,000 பேருக்கு அரிசி, உடைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை நேற்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைத்தார். அவர் பேசியதாவது:-
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து உதவியது மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் இந்த பாக்கியத்தை அளித்து இருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்வேன். இதேபோன்று அனைத்து நடிகர்களும் உதவி செய்வார்கள்.
மழை வெள்ளம் ஏற்பட்டபோது ஏராளமான போலீசார், அரசு அதிகாரிகள் பலரும் தங்களது உயிரை துச்சமென கருதி பொதுமக்களின் உயிரை காப்பாற்றி உள்ளனர். அரசு குளங்களை தூர்வாரியது. எனினும் நமது நாடு மிகப்பெரியது. இங்கு எவ்வளவு செய்தாலும் போதாது. ஒவ்வொரு சம்பவத்திலும் புதிதாக கற்று கொள்கிறோம். அடுத்தமுறை தூத்துக்குடியில் மழைவெள்ளத்தில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.