நடிகர் பிரபு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்...!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் பிரபு நலமுடன் வீடு திரும்பினார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2023-02-27 21:46 IST

சென்னை,

மறைந்த நடிகர் திலகம் சிவாஜியின் மகன் பிரபுவும் கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். கதாநாயகனாக கலக்கி வந்த பிரபு தற்போது பல படங்களிலும் முக்கியமான பாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். அத்தோடு கடந்தாண்டு காத்துவாக்குல ரெண்டு காதல், பொன்னியின் செல்வன், நானே வருவேன் போன்ற படங்களில் நடித்திருந்தார். அதேபோல் கடந்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸான விஜய்யின் வாரிசு படத்திலும் கெஸ்ட் ரோல் வந்து போனார்.

இவ்வாறு இருக்கையில், சில தினங்களுக்கு முன்னர் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரகத்தில் கற்கள் இருந்ததால் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். லேசர் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிறுநீரகத்தில் கல் அடைப்பு பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்த நடிகர் பிரபு, மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு அதன் பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய வெள்ளாளர் பூதி விக்ரமகேசரி என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்