ரூ.4.7 கோடி விலை மதிப்பிலான காருக்கு சொந்தக்காரரான நடிகர் கார்த்திக் ஆர்யன்

இந்தி திரையுலகை சேர்ந்த நடிகர் கார்த்திக் ஆர்யன், ரூ.4.7 கோடி மதிப்பிலான இந்தியாவின் முதல் மெக்லாரன் வகை காரை பரிசாக பெற்றுள்ளார்.;

Update: 2022-06-24 13:09 GMT



புனே,



இந்தி திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர் கார்த்திக் ஆர்யன் சமீபத்தில் நடித்த பூல் புலாயா என்ற படத்தின் 2ம் பாகம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. டி-சீரிஸ் நிறுவன தலைவர் மற்றும் பட தயாரிப்பாளரான பூஷண் குமார் மற்றும் நடிகர் கார்த்திக் ஆர்யன் இணைந்து இதுவரை இரண்டு வெற்றி படங்களை கொடுத்து உள்ளனர்.

அவற்றில், கடந்த 2018ம் ஆண்டு வெளியான சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி என்ற படம் வசூலில் அதிக லாபம் ஈட்டியது. அதனை தொடர்ந்து, இவர்களது கூட்டணியில் சமீபத்தில் வெளியான பூல் புலாயா 2 படமும் பாக்ஸ் ஆபீசில் ரூ.180 கோடி வசூலித்தது.

இந்த படத்தில், நடிகைகள் தபு மற்றும் கியாரா உள்ளிட்டோரும் நடித்து உள்ளனர்.

அடுத்து ஷேஜடா என்ற படத்தில் கார்த்திக் மற்றும் பூஷண் இணைந்து பணியாற்ற உள்ளனர். இதில், கார்த்திக்குக்கு ஜோடியாக நடிகை கிரீத்தி சனோன் நடிக்கிறார். பரேஷ் ராவல் மற்றும் நடிகை மணீஷா கொய்ராலா உள்ளிட்டோரும் நடிக்கும் இந்த படத்தின் இயக்குனர் பணியை ரோகித் தவான் மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் நடிகர் கார்த்திக் ஆர்யனுக்கு, பட வெற்றிக்காக பூஷண் விலை உயர்ந்த பரிசு ஒன்றை அளித்து உள்ளார். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் கார்த்திக் வெளியிட்ட செய்தியில், சீன உணவை சாப்பிட புதிய மேஜை ஒன்றை நான் பரிசாக பெற்றுள்ளேன்.

உழைப்பின் கனி இனிக்கும் என கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், அது இவ்வளவு பெரியது என எனக்கு தெரியாது. இந்தியாவின் முதல் மெக்லாரன் ஜி.டி. கார். அடுத்த பரிசு ஒரு தனியார் ஜெட் விமானம் ஆக கூட இருக்கும் சார். நன்றி என தெரிவித்து உள்ளார்.

இந்த காரின் விலை ரூ.4.7 கோடி. ஆரஞ்சு வண்ணத்தில் கருப்பு நிற சக்கரங்களை கொண்டுள்ளது. மும்பையில் உள்ள கார் நிறுவனத்திடம் இருந்து இந்த கார் வாங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில், மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட மெக்லேரன் வகை கார் இதுவாகும். அதற்கு நடிகர் கார்த்திக் ஆர்யன் சொந்தக்காரராகி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்