விவாகரத்துக்கு விருப்பம் இல்லை ... பேச தயார்; நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அறிக்கை
நடிகர் ஜெயம் ரவியுடன் தனிப்பட்ட முறையில் பேச தான் தயாராக இருப்பதாக ஆர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.;
சென்னை,
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்து உள்ளார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார். இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, "இது எனது கவனத்துக்கு வராமலும் எனது ஒப்புதல் இல்லாமலும் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு'' என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது. ஆனால் கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விவாகரத்து விவகாரம் தொடர்பாக ஆர்த்தி அறிக்கை ஒன்றை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
அதில், 'எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பொதுவெளியில் பகிரப்படும் கருத்துக்களை பார்த்து நான் அமைதியாக இருப்பது எனது பலவீனம் மற்றும் குற்ற உணர்வினால் அல்ல. உண்மையை மறைக்க என்னைப் பற்றி மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பதிலளிக்காமல் நான் கண்ணியமாக இருக்கிறேன். ஆனால் நீதி நிலை நிறுத்தப்படும் என நம்புகிறேன். தெளிவாக சொல்வது என்றால் நான் ஏற்கனவே விடுத்த அறிக்கையில் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அது அவர் எடுத்த தனிப்பட்ட முடிவு தான். அவரின் முடிவு அதிர்ச்சியை அளிக்கிறது. இப்பவும் நான் அவருடன் தனிப்பட்ட முறையில் பேச தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கான வாய்ப்பு இப்போது வரை எனக்கு மறுக்கப்பட்டுள்ளது. திருமண பந்தத்தை நான் மிகவும் மதிக்கிறேன். இது பற்றி பொதுவெளியில் பேசி யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. என்னுடைய குடும்பத்தின் நலமே எனக்கு முக்கியம். கடவுளின் அருள் கிடைக்கும் என நம்புகிறேன்''.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.