திருப்பதியில் நடிகர் அஜித் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு நடிகர் அஜித் சாமி தரிசனம் செய்தார்.;
அஜித் தற்போது இரண்டு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில் ஒரு படம்தான் 'குட் பேட் அக்லி'. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு பின்னர் ஆதிக் இயக்கும் படம் இதுவாகும். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் அஜித்துடன் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலாவும் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
'குட் பேட் அக்லி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் ஐதராபாத்தில் தொடங்கியது. அதில் அஜித் நடித்த பாடல் காட்சி உள்பட சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் முடிவுக்கு வந்தது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் அஜித் ரசிகர்களுக்கு 'குட் பேட் அக்லி' செம விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் கைவசம் உள்ள மற்றொரு படம் 'விடாமுயற்சி'. அப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன், ஆரவ், ரெஜினா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் 20 சதவீத படப்பிடிப்பு மட்டுமே எஞ்சி உள்ளது. அதை படமாக்க இந்த மாத இறுதியில் அஜர்பைஜான் செல்கிறது படக்குழு.
இந்நிலையில், விடாமுயற்சி ஷூட்டிங்கிற்காக வெளிநாடு செல்லும் முன், திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் அஜித். இன்று அதிகாலை திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலுக்கு வந்த அஜித், வி.ஐ.பி தரிசன நேரத்தின் போது சாமி தரிசனம் செய்துள்ளார். பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்திருந்த அஜித்தை பார்த்த ரசிகர் ஒருவர் அவருக்கு பெருமாள் சிலை ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.