'வாடிவாசல்' படத்தில் சூர்யாவுக்கு வில்லனாகும் அமீர்?
‘வாடிவாசல்’ படத்தில் நடிகர் சூர்யாவுக்கு தான் வில்லனாக நடிக்க இருப்பதாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். மேலும், அந்தத் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
2002-ம் ஆண்டு சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்து வெளியான 'மெளனம் பேசியதே' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் அமீர். அதைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளிவந்த ராம் திரைப்படத்தை இயக்கினார். மேலும் 2007-ம் ஆண்டு நடிகர் கார்த்தியின் முதல் படமான பருத்தி வீரன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் அமீருக்கு மிகப் பெரிய புகழை சம்பாதித்து கொடுத்தது. அதைதொடர்ந்து சிலப் படங்களில் கவுரவ தோற்றத்திலும், முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து வந்தார்.
2009 ஆம் ஆண்டு வெளிவந்த யோகி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த வட சென்னை திரைப்படத்தில் ராஜன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார்.
'பருத்திவீரன்' படம் தொடர்பாக அமீர் தரப்புக்கும் நடிகர் கார்த்தி தரப்பிற்கும் பிரச்சினை பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதனால், அவர் சூர்யாவுடன் இணைந்து நடிப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
நேற்று வெளியான 'உயிர் தமிழுக்கு' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அப்படத்திற்கான கொடுத்த நேர்காணலில் வாடிவாசல் திரைப்படத்தின் சுவாரசிய தகவல்களை கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த நேர்காணலில் அமீர் கூறியதாவது " வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும். படம் திட்டமிட்டபடியே நடக்கும் எனவும், வெற்றிமாறன் விடுதலை பாகம் 2 வேலைகளில் பிசியாக இருப்பதால் அதை முடித்துவிட்டு வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்றும் , முழுக்க முழுக்க ஹீரோவுடன் பயணிக்கும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன், பல ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவுடன் இணையும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்" என கூறியுள்ளார்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அமீர்- சூர்யா இணை நடிகர்களாக 'வாடிவாசல்' படத்தில் இணைந்திருக்கிறார்கள்.