சினேகன் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன்- நடிகை ஜெயலட்சுமி

சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி, என் மீது சினேகன் கூறிய குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்காவிட்டால் சட்டப்படி நடவடிகை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Update: 2022-08-09 09:39 GMT

Full View

திரைப்பட பாடலாசிரியரான கவிஞர் சினேகன், 'சினேகம்' என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். தனது அறக்கட்டளை பெயரை சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி தவறாக பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினேகன் புகார் அளித்திருந்தார். தன் மீதான குற்றச்சாட்டை ஜெயலட்சுமி மறுத்துள்ளார். இந்த நிலையில் அவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

நான் தமிழக பா.ஜ.க. மாநில மகளிர் அணி துணை தலைவியாக உள்ளேன். 2018-ம் ஆண்டு 'சினேகம்' என்ற பெயரில் அறக்கட்டளையை தொடங்கி, நற்பணிகள் செய்து வருகிறேன். இந்நிலையில் சினிமா பாடலாசிரியர் சினேகன் என் மீது பொய் புகார் அளித்துள்ளார். நான் பலரை மயக்கி சினேகன் நடத்தி வருவதாக கூறும் அறக்கட்டளைக்கு சேர வேண்டிய தொகையை பண மோசடி செய்து வருவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து எனக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், நான் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று தனியாக அழைத்ததாகவும் கூறியுள்ளார்.

நான் முறைப்படி, 'சினேகம்' அறக்கட்டளை தொடங்கி நடத்தி வருகிறேன். ஆனால் என்னை ஒரு பெண் என்றும் பாராமல் குற்ற வழக்குகள் எதுவும் இல்லாத நிலையில் என் மீது அவதூறு பரப்பி உள்ளார். என் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தி உள்ளார். ஆதாரங்கள் இல்லாமல் என் மீது பொய் புகார் அளித்துள்ள சினேகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பின்னர் ஜெயலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், 'விளம்பர புகழுக்காக சினேகன் என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். அவர், தி.மு.க.வுக்கு விலைக்கு போய் விட்டாரா? என்று தெரியவில்லை' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்