பழமையான இந்த திரையரங்கத்தில் வேலைபார்த்த புதுக்கோட்டையை சேர்ந்த 71 வயது கந்தசாமி கூறுகையில், ``நான் எனது 11 வயதில் இந்த திரையரங்கத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆரம்பத்தில் சின்ன வேலைகள் செய்தேன். அதன்பின் டிக்கெட் கொடுக்கும் பணியும் பார்த்தேன். கடந்த 1983-ல் பணியில் இருந்து வெளியே வந்தேன். அதற்கு முன்பு மேலாளராகக்கூட பணியாற்றினேன்.
கடந்த 1966-67 காலக்கட்டத்தில் தி.மு.க. தேர்தல் நிதிக்காக எம்.ஜி.ஆர். புதுக்கோட்டை நகர்மன்றத்தில் ஒரு நாடகம் நடத்தினார். அட்வகேட் அமரன் என்ற நாடகத்தில் அவர் நடித்தார். சுமார் 3 மணி நேரம் அந்த நாடகம் நடந்தது. நாடகத்தை பார்ப்பதற்காகவும், எம்.ஜி.ஆரை பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இதனால் நகர்மன்ற வளாகம் முழுவதும் கூட்டம் நிரம்பியது. அவர் நடித்து முடித்து வெளியே வரமுடியாத நிலையில் இருந்தது.
அப்போது அருகில் உள்ள பழனியப்பா திரையரங்கம் பகுதிக்கு ரசிகர்கள் அனைவரும் வரும்படியும், திரையரங்கத்தில் இருந்து ரசிகர்களை எம்.ஜி.ஆர். சந்திப்பார் எனவும் அறிவித்தனர். அதன்பின் கூட்டம் பழனியப்பா திரையரங்கத்தை நோக்கி படையெடுத்து வந்தது. நகர்மன்றத்தில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியே வந்து திரையரங்கத்தின் மேல் நின்று ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அப்போது ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் எஸ்.எஸ்.ராஜேந்திரன் இந்த திரையரங்கத்தில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தினார். அதனையும் பார்க்க ரசிகர்கள் ஏராளமாேனார் வந்தனர்'' என்று அவர் மலரும் நினைவுகளை நம்மோடு பகிர்ந்தார்.