ஜனநாயகத்தின் மிகுந்த வருத்தத்திற்கு உரிய ஒரு பகுதி; தி கேரளா ஸ்டோரி படம் பற்றி இயக்குநர் பேச்சு

நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தங்களது குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும் என தயாரிப்பாளர் விபுல் ஷா கூறியுள்ளார்.

Update: 2023-05-17 15:05 GMT

புனே,

தி கேரளா ஸ்டோரி படம் டிரைலர் வெளியீட்டின்போது, பெரும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள தொடங்கியது. முதலில், கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்றும் அதன்பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்து கொண்டனர் என்றும் டிரைலர் காட்சிகள் அமைந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

படம் சட்டரீதியாக சில விசயங்களை எதிர்கொண்டு, அதனால் படத்தின் டிரைலர் ஆனது 32 ஆயிரம் பெண்களை பற்றிய விசயம் என்பதில் இருந்து, பட காட்சிகளில் தோன்ற கூடிய 3 பெண்களை பற்றியது என மாற்றும் கட்டாயத்திற்கு ஆளானது.

இந்த படத்தில் அவர்கள் 3 பேரையும் லவ் ஜிகாத் என்ற பெயரில் மோசடி செய்து, பின்னர் கர்ப்பமடைய செய்து, அதன்பின் ஈராக் மற்றும் சிரியாவுக்கு நாடு கடத்தி, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைய செய்த விவரங்களை படம் உள்ளடக்கி உள்ளது.

திரைப்படத்தில் நடிகைகள் அதா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களையேற்று நடித்து உள்ளனர்.

நாட்டில் வெறுப்பை பரப்பும் நோக்கோடு படம் அமைந்து உள்ளது என்று பல்வேறு அரசியல் தலைவர்களும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

எனினும், பயங்கரவாத சதி திட்டங்களை பற்றிய விசயங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, பிரதமர் மோடி இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்த அதேவேளையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்திற்கு மாநிலத்தில் வரி விலக்கு அளித்து உள்ளார். உத்தர பிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத்தும் வரி விலக்கு அறிவித்து உள்ளார். எனினும், மேற்கு வங்காளத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க வேண்டி உள்ளது என்பதற்காக படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் இன்று செய்திளார்கள் சந்திப்பை நடத்தினர். இதில் சுதீப்தோ சென் கூறும்போது, இது நம்முடைய ஜனநாயகத்தின் மிகுந்த வருத்தத்திற்குரிய ஒரு பகுதி. ஜனநாயகம் என்ற பெயரில் என்ன வேண்டுமென்றாலும் நடைபெறுவது என்பது சரியல்ல.

இந்தியாவில் பயங்கரவாத நெட்வொர்க் பற்றி நாம் பேசும்போது, ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் மனச்சான்று கூறும் விசயங்களை கேட்டு, ஒன்றிணைந்து முன்வந்து, சமூக தீங்குகளுக்கு எதிராக போராட வேண்டும் என கூறியுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா கூறும்போது, நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தங்களது குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும். இது இந்த 3 கேரள பெண்களின் கதையல்ல. நாடு முழுவதும் இந்த விசயம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் பார்க்க வேண்டியது நமது பொறுப்பு. இந்த பெண்களின் குரலாகவும் நாம் இருக்க வேண்டி உள்ளது என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, இந்த படம் தயாரிப்பது தனது கடமை என தயாரிப்பாளர் விபுல் ஷா கூறியுள்ளார். படத்தின் திரைக்கதையுடன் சுதீப்தோ என்னிடம் வந்தபோது, இந்த படம் கட்டாயம் நாம் பண்ண வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. எங்களுக்கு எதிராக எல்லா சவால்களும் வரும் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். இது அரசியல் சார்ந்த ஒரு பிரசார படம் என முத்திரை குத்தப்படும் என்றும் எங்களுக்கு தெரியும்.

ஆனால், அவையெல்லாம் இந்த படம் உருவாவதற்கு தடையாக இருக்கவில்லை. இந்த பெண்களுக்கும், நாம் என்னவென்ன பிரச்சனைகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டுமோ? என்று நன்றாக தெரியும். ஆனால், குறைந்தபட்சம் இந்த தேசம் இதுபற்றி பேச தொடங்கியது. இந்த படம் வரும், போகும். தி கேரளா ஸ்டோரி படம் பற்றி நீங்கள் மறந்து விடுங்கள். ஆனால், இதில் உள்ள விசயங்கள் போய் விட கூடாது. நாட்டில் பேசுவதற்கான மையபொருளாக இந்த விசயங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும். அதுவே முக்கியம் என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்