பிரபல பாலிவுட் நடிகரின் உறவினர் சாலை விபத்தில் பலி
பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதியின் உறவினர் ராகேஷ் திவாரி சென்ற கார் விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்த ராகேஷ் உயிரிழந்து விட்டார்.;
தன்பாத்,
டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் தேசிய நெடுஞ்சாலை-2 பகுதியில் நேற்று மாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதியின் உறவினரான ராகேஷ் திவாரி மற்றும் பங்கஜின் சகோதரி சபீதா திவாரி ஆகிய இருவரும் பயணித்துள்ளனர்.
அந்த கார் பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் நோக்கி சென்றது. இந்நிலையில், அந்த கார் நிர்சா பஜார் என்ற இடத்திற்கருகே சென்றபோது, நேற்று மாலை 4.30 மணியளவில் சாலை தடுப்பானில் திடீரென மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த 2 பேரும் படுகாயமடைந்தனர். கார் சுக்குநூறாக உடைந்தது.
அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக, தன்பாத்தில் உள்ள ஷாகித் நிர்மல் மகதோ மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில், வழியிலேயே ராகேஷ் உயிரிழந்து விட்டார். திரிபாதியின் சகோதரிக்கு காலில் காயம் ஏற்பட்டு உள்ளது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் பங்கஜ் திரிபாதி பாலிவுட்டில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 2 தேசிய விருது வாங்கிய படங்களிலும் நடித்துள்ளார். இந்த விபத்துபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.