20.6.1982 அன்று தென்னாற்காடு மாவட்ட அ.தி.மு.க. மாநாடு கடலூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வெளியூர்களில் இருந்து லாரி, பஸ், டிராக்டர்கள், மாட்டு வண்டிகளில் தொண்டர்கள் வந்து கடலூரில் குவிந்தனர். ஊர்வலம் பகல் 11.50 மணிக்கு திருவந்திபுரத்தில் இருந்து தொடங்கியது. முதலில் 3 யானைகளிலும், 13 குதிரைகளிலும் தொண்டர்கள் கொடி பிடித்து வந்தனர். அவர்களின் பின்னால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமைச்சர்களும், தலைவர்களும் சென்றனர். அப்போது நடிகையாக இருந்த ஜெயலலிதா அலங்கார வண்டியில் வந்தார்.
ஊர்வலத்தை அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். காண்பதற்காக நியூசினிமா தியேட்டர் எதிரே அலங்கார மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மேடைக்கு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வந்ததும், அங்கு திரண்டிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அந்த மேடையில்தான் ஜெயலலிதாவின் அரசியல் பயணம் தொடங்கியது. அப்போது அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். விழாவில் நியூசினிமா முத்தையாவின் மகள் பத்மபிரியா விலை உயர்ந்த பேனாவை, ஜெயலலிதாவுக்கு நினைவுப் பரிசாக அளித்தார்.
அந்த சமயத்தில் நியூ சினிமா தியேட்டரில் நின்ற அசோக மரத்தின் மீது பலர் ஏறி நின்று ஊர்வலத்தை பார்த்தனர். அப்போது மரம் முறிந்ததால், 2 பேர் கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவத்தை மறக்க முடியாது என்கிறார் நியூ சினிமா முத்தையாவின் மருமகன் பிரபு.