அஜித்துடன் நடிப்பதை உறுதி செய்த மஞ்சு வாரியர்
'ஏகே 61' படத்தில் அஜித்துடன் இணைந்து நடிப்பதை மஞ்சுவாரியர் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார்.
வினோத் இயக்கும் புதிய படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இது அஜித்துக்கு 61-வது படம். இந்த படத்தில் அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் அதில் ஒன்று வில்லன் கதாபாத்திரம் என்றும் பேசப்படுகிறது.
படத்தில் அஜித்குமாருக்கு 2 ஜோடிகள் என்றும் அதில் ஒரு ஜோடியாக நடிக்க மலையாள நடிகை மஞ்சுவாரியரிடம் பேசி வருவதாகவும் சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
இந்த நிலையில் அஜித்துடன் நடிப்பதை மஞ்சுவாரியர் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் அஜித்குமாருடன் இணைந்து நடிப்பது உண்மைதான். படத்தின் கதை பிடித்து இருந்தது. நம்பிக்கைக்குரிய படம். கதை பற்றி வேறு எதுவும் சொல்ல முடியாது'' என்றார்.
இந்த படத்தில் மஞ்சு வாரியருக்கு இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரம் என்றும், அவருக்கு சண்டை காட்சிகளும் உள்ளது என்றும் கூறப்படுகிறது. மஞ்சு வாரியர் ஏற்கனவே தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்துள்ளார். வில்லனாக சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஜான் கொக்கன் நடிக்கிறார்.