வெப் தொடராகிறது எம்.ஜி.ஆர்- எம்.ஆர்.ராதா துப்பாக்கிச் சூடு சம்பவம்
நடிகர் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் வெப் தொடராகிறது.
வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் சமீப காலமாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெப் தொடர்கள் அதிகம் தயாராகி வருகின்றன. உண்மை சம்பவ கதைகளையும் வெப் தொடர்களாக எடுக்கின்றனர். முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள். இந்த நிலையில் நடிகை ராதிகாவும் எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா இடையே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை வெப் தொடராக எடுக்கப்போவதாக அறிவித்து உள்ளார்.
நடிகர் எம்.ஆர்.ராதா பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். அன்றைய காலத்தில் முன்னணி கதாநாயகனாக இருந்த எம்.ஜி.ஆருக்கும், எம்..ஆர்.ராதாவுக்கும் இடையே ஒரு பிரச்சினையில் மோதல் ஏற்பட்டது. அப்போது எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்போது இந்தியாவையே உலுக்கியது.
தற்போது நடிகை ராதிகா தெலுங்கு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “என் தந்தை எம்.ஆர்.ராதா சர்ச்சைக்குரிய மனிதர் என்பது தெரிந்த விஷயம். அந்த நாட்களில் எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே ஏதோ பிரச்சினை இருந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அனைவருக்கும் தெரியும். அந்த சம்பவத்தை வெப் தொடராக தயாரிக்க இருக்கிறேன். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்'' என்றார். எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.