விஜயசாந்திக்கு புரியாத புதிர்
தமிழ், தெலுங்கு திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த விஜயசாந்தி தற்போதைய படங்களின் வசூல் விவரங்கள் தன்னை குழப்புவதாக தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து விஜயசாந்தி அளித்துள்ள பேட்டியில், ‘‘நான் கதாநாயகியாக நடித்த காலத்தில் சினிமா படங்கள் 100 நாட்கள், 200 நாட்கள் ஓடின. 365 நாட்கள் ஓடிய படங்களும் உண்டு. ஆனால், இப்போது ஒரு புதிய டிரென்ட் நடக்கிறது. ரிலீஸ் ஆன ஒரு வாரத்திலேயே தியேட்டரை விட்டு படம் காணாமல் போனாலும் வசூல் சாதனை படைப்பதாக சொல்கிறார்கள்.
படம் எத்தனை நாள் ஓடியது என்பதை வைத்துத்தான் அப்போதெல்லாம் அது வெற்றிப் படமா இல்லையா என்பதை கணக்கிட்டார்கள். ஆனால் இப்போது வசூலை வைத்து வெற்றிப்படங்களை நிர்ணயிக்கிறார்கள். இது எனக்கு இன்றும் கூட புரியாத புதிராகவே உள்ளது. ரசிகர்கள் என்னவோ அப்போது எப்படி சினிமாவை ரசித்தார்களோ, இப்போதும் அப்படித்தான் ரசிக்கிறார்கள். ஆனால், படம் ஓடும் நாட்கள் இதில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் சினிமா துறையை சேர்ந்த எனக்கு இன்னும் புரியவில்லை. குழப்பமாக உள்ளது’’ என்றார்.