நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பிடம் 2-வது நாளாக விசாரணை
நடிகை கடத்தல் வழக்கில் முன்னணி மலையாள நடிகர் திலீப்பிடம் போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.
பிரபல மலையாள நடிகையை கடந்த 2017-ல் காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னணி மலையாள நடிகர் திலீப் உள்ளிட்ட சிலர் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கில் ஏப்ரல் 15-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சாட்சிகளிடமும் விசாரணை நடந்துள்ளது. தற்போது நடிகர் திலீப்பிடம் விசாரணை நடத்த போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து. எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா போலீஸ் கிளப்பில் திலீப் நேற்று முன்தினம் ஆஜரானார்.
அவரிடம் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி ஸ்ரீஜித் தலைமையில் 2 போலீஸ் சூப்பிரண்டுகள் விசாரணை நடத்தினர். 7 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்றும் திலீப் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.
நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ, திலீப்பிடம் இருப்பதாகவும், திலீப்பின் செல்போன் வாட்ஸ்அப் தகவல்கள் அழிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து திலீப்பிடம் கேள்விகள் எழுப்பி போலீசார் விசாரணை நடத்தினர்.