இளையராஜா இசையமைத்த ‘காதல் செய்' படத்துக்கு தணிக்கை குழு தடை
இளையராஜா இசையமைத்த ‘காதல் செய்' படத்தில் ஆபாச காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து படத்தை வெளியிட தணிக்கை குழு தடை விதித்துள்ளது.;
காதல் செய் என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். இதில் சுபாஷ் சந்திரபோஸ் நாயகனாகவும், நேகா நாயகியாகவும் நடித்து உள்ளனர். மனோபாலா, சாமிநாதன், வைத்தியநாதன், அனுபமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். கு.கணேசன் டைரக்டு செய்து உள்ளார்.
காதல் செய் படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் காதல் செய் படத்தில் ஆபாச காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து படத்தை வெளியிட தணிக்கை குழு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து டைரக்டர் கணேசன் கூறும்போது, ‘’காதல் செய் முழுக்க காதல் படம். நான் ஏற்கனவே இசைபிரியா வாழ்க்கையை மையமாக வைத்து இயக்கிய போர்க்களத்தில் ஒரு பூ படத்தை இந்தியாவில் எங்குமே வெளியிடக்கூடாது என்று தடை விதித்தனர்.
இதேபோல 18.5.2009 என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்திருந்தேன். அதற்கும் தொல்லை கொடுத்தார்கள். எனவே இங்குள்ள தணிக்கை குழுவினரின் அத்துமீறல் குறித்து மும்பையில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் புகார் செய்தேன். அதை மனதில் வைத்தே காதல் செய் படத்துக்கு தடை விதித்துள்ளனர். இதை சட்ட ரீதியாக சந்திப்பேன்’’ என்றார்.