கதாநாயகியாக அறிமுகமாகும் அரபிக்குத்து பாடகி
முன்னணி பாடகி ஜொனிதா காந்தி ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.;
ஏ.ஆர்.ரகுமானின் மேடை கச்சேரிகள் என்றாலும் சரி, அனிருத் பாடல்கள் என்றாலும் சரி தவறாமல் இடம் பிடித்து விடுபவர், ஜொனிதா காந்தி. இவர் தமிழில் ‘காப்பான்' படத்தில் ‘ஹே ஹமிகோ...', ‘காற்று வெளியிடை' படத்தில் ‘அழகியே...', ‘டாக்டர்' படத்தில் ‘செல்லம்மா... செல்லம்மா...' உள்பட பல பாடல்களை பாடியுள்ளார். விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்' படத்தில் ‘அரபி குத்து' பாடலை பாடியிருக்கிறார். இந்த பாட்டு தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்படும் பாடலாக ‘டிரெண்டிங்'கில் உள்ளது. பாடுவதை காட்டிலும், பாடும்போது அவரது உற்சாகத் துள்ளலும், மிட்டாய் சிரிப்பும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவிடும். இதனாலேயே அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் பாடுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
இந்தநிலையில் ஜொனிதா காந்தி ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் டைரக்டு செய்கிறார். ஜொனிதா காந்திக்கு ஜோடியாக கிருஷ்ணகுமார் நடிக்கிறார். இவர், ‘சூரரைப் போற்று' படத்தில் சூர்யாவின் நண்பராக சைதன்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆவார்.
காதலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கூட்டாக தயாரிக்கிறார்கள்.
இதுகுறித்து ஜொனிதா காந்தி கூறுகையில், "நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் பல வாய்ப்புகளை தவிர்த்து வந்தேன். ஆனால் இந்த கதை எனக்கு மிகவும் பிடித்தது. மேலும் உண்மை காதலை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் என்பதால் உடனடியாக ஓ.கே. சொல்லிவிட்டேன்" என்றார்.