இயக்குனர் அமீரின் புதிய படத்தின் டைட்டில் வெளியானது...!
இயக்குனர் அமீர் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது.
சென்னை,
'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த அமீர் அதைத் தொடர்ந்து ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கினார்.
இயக்குனராக இருந்த அமீர் 'யோகி' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ’வடசென்னை’ திரைப்படத்தில் நடித்து பலரது பாராட்டுக்களை பெற்றார் அமீர்.
தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் எழுத்தாளர் தங்கம் இருவரும் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு 'இறைவன் மிகப் பெரியவன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி மற்றும் சத்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.