வெற்றிமாறனுடன் கைகோர்க்கிறார் இயக்குனர் அமீர்..!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான வெற்றிமாறன் மற்றும் அமீர் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.;

Update: 2022-02-03 02:54 GMT
சென்னை,

'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அதைத் தொடர்ந்து ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். 'யோகி' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். 

நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றார். மேலும் தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் வெற்றி மாறன் இயக்கும் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் அமீர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அமீர் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அமீர் வெளியிட்டுள்ள தகவலில், 'எனது அடுத்த பயணம் தொடங்குகிறது. திரைப்படமென்பது ஒருவரின் தனிப்பட்ட பார்வைதான். இன்னொருவருடன் கைக்கோர்க்கும் போதுதான் அது அழகாக மாறும். அது இன்று (02.02.2022) நடைபெறுகின்றது' என்று கூறியுள்ளார். 



நகரத்தை மையமாக கொண்ட திரைப்படம் ஒன்றை அமீர் இயக்க இருப்பதாகவும் அந்த படத்திற்கு எழுத்தாளர் தங்கம் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இருவரும் இணைந்து திரைக்கதை எழுத இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்