இன்று மாலை வெளியாகிறது வலிமை திரைப்படத்தின் டிரைலர்
இன்று மாலை 6.30 மணிக்கு வலிமை படத்தின் டிரைலர் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை,
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான நேர்கொண்ட பார்வை தான் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த கடைசி திரைப்படம். இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பாலிவுட் படமான "பிங்க் " படத்தின் ரீமேக்காகும்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் வினோத் கூட்டணியில் அந்த ஆண்டே அஜித் அவர்கள் தனது அடுத்த படத்தில் நடிக்க தொடங்கினார். இதற்கு வலிமை என பெயரிட்டு இருந்தனர். போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் அனைத்து படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இதனால் நாடு முழுவதும் அனைத்து சினிமா சார்ந்த படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டன. கொரோனா தொற்று குறைந்த பிறகு மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தியதும் மீண்டும் தொடங்கப்பட்டது.ஊரடங்கு பாதிப்பு , படப்பிடிப்பின் போது காயம் என பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனாலும் ஒரு வழியாக இந்த ஆண்டு வெற்றிகரமாக படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
அதை தொடர்ந்து இந்தப் படத்தின் ' நாங்க வேற மாறி' பாடல் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்த பாடல் யூடியூப் இணையதளத்தில் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனையடுத்து அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் வலிமை படத்தின் 2-வது பாடலை படக்குழு கடந்த 4 ஆம் தேதி வெளியிட்டது.யுவன் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் சித்ஸ்ரீராம் இப்பாடலை பாடியிருந்தார். இந்த பாடலும் அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்டது.
இப்படத்தின் மேக்கிங் வீடியோ கடந்த 14 ஆம் தேதி வெளியானது.யாரும் எதிர்ப்பாராத வகையில் அமைந்த இந்த மேக்கிங் வீடியோ சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலானது.
WE CAN’T KEEP CALM!!!
— Zee Studios (@ZeeStudios_) December 30, 2021
Finally, the wait is over. #ValimaiTrailer comes your way today at 6:30 PM😎. #Valimai
PS: KEEP YOUR EARPHONES HANDY!#AjithKumar@BoneyKapoor#HVinoth@thisisysr@BayViewProjOffl@sureshchandraa@vigneshshivN@sidsriram@SonyMusicSouth#NiravShahpic.twitter.com/NPza6gbvOA
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டுடியோஸ் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் " பெரிதாக ஒன்று வரப்போகிறது " என தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அவர்கள் டுவிட்டர் பதிவில் " இனியும் அமைதியாக இருக்க முடியாது. காத்திருந்த நேரம் முடிந்து விட்டது. இன்று மாலை 6.30 மணிக்கு வலிமை படத்தின் டிரைலர் வெளியாகும் " என தெரிவித்துள்ளனர்.